16 January 2019

 • சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மின்மாற்றிகள் ஏற்றிச் சென்ற வாகனங்களால் மக்கள் அவதி

  Posted by dinakaran on 11 January 2019

  மானூர், ஜன. 11:  மானூர் அருகே சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மின்மாற்றிகள் ஏற்றிச் சென்ற வாகனங்களால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இதனால் அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டியில் தனியார் நிறுவனம் மூலம்  சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் பேனல் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. நிலங்கள் சீர்திருத்தம் முடிந்து சூரியஒளி மின்சார தயாரிப்புக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் பணிகள் நடக்கின்றன.  கடந்த ஒரு வார  காலமாக கனரக வாகனங்களில் இதற்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், நேற்று  முன்தினம் மிகப்பெரிய 2 மின்மாற்றிகள் கொண்டு வரப்பட்டன. தெற்குப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதி வழியாக 800  மீட்டருக்கு மேல் மின்மாற்றிகளுடன் வாகனங்கள் கடந்து செல்ல வேண்டியுள்ளது.  முதற்கட்டமாக கடந்த 8ம்  தேதி மாலை தெற்குபட்டி கிராமம் அருகே வந்தபோது மின்வயர் குறுக்காக சென்றதால் நடுவழியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் மானூரில் இருந்து தெற்குபட்டிக்கு பஸ்சில் வந்த பயணிகளும், பள்ளி குழந்தைகளும் ஊருக்குள் செல்ல முடியாமல் பஸ்சில் இருந்து இறங்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்.  தொடர்ந்து மின்வயர்கள் உயர்த்தப்பட்டு வாகனங்கள் கடந்து சென்றன. அப்போது ஊரின் வெளிப்பகுதியில் உள்ள பாலத்தின் கைப்பிடிச் சுவர் உடைத்துவிட்டு சென்றுள்ளன. மேலும் குடியிருப்பு பகுதியை கடந்து செல்ல அனைத்து வீடுகளுக்கு செல்லும் மின்இணைப்பு வயர்களை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மின்மாற்றி ஏற்றி வந்த 2 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டன.  மேலும் மற்ற பொருட்கள் ஏற்றி வந்த 15க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் தெற்குபட்டி கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் ஆவேசமடைந்த கிராம மக்கள், நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மானூர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் கம்பெனி அதிகாரி தியாகராஜன் மற்றும் கிராம ஊர் பெரியவர்களை அழைத்து பேசினர்.  பின்னர் மின்வாரிய அதிகாரிகள் உதவியோடு மின்வயர்களை துண்டித்து வாகனங்கள் சென்றதும் உடனடியாக இணைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். உடனடியாக மின்வாரியத்தினர் வீடுகளுக்கான இணைப்பை துண்டித்து லாரிகள் செல்ல வழி ஏற்படுத்தினர். தொடர்ந்து வீடுகளுக்கான மின் இணைப்புகள் வழங்கும் பணியும் நடந்தது.

  Source Link

  Read more

 • கடனாநதி அணைப்பகுதியில் குட்டியுடன் யானைகள் உலா

  Posted by dinakaran on 11 January 2019

  கடையம், ஜன. 11:  கடையம் கடனா நதி அணைப்பகுதியில் குட்டியுடன் 4 யானைகள் உலா வருகின்றன.  கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி அணை உள்ளது. இந்த அணை மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் கடனா நதி அணை விளங்குகிறது. அணை பாதுகாப்பு பணியில் உதவி பொறியாளர் உள்பட 5 பேர் ஈடுபட்டு வருகின்றனர். கடனா நதி அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற அத்ரிமலை கோரக்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகாமலிருக்க மலையடிவாரத்தில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் வலம் வந்த 4 யானைகள், அணை அலுவலகம் அருகே பலத்த சத்தத்துடன் பிளிறியது. யானைகள் பிளிறலை கேட்ட அணை பாதுகாப்பு ஊழியர்கள் பீதியடைந்தனர். மலையடிவாரத்தில் உள்ள அழகப்பபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராம மக்கள், இரவு நேரங்களில் வயலுக்கு காவல் சென்ற விவசாயிகளும் யானைகள் பிளிறலால் அச்சமடைந்து இருக்கின்றனர். தகவலறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் கொம்மு ஓம்கார உத்தரவுப்படி கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறையினர் கடனா அணைப் பகுதியில் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த சில நாட்களாக கடனா அணை அலுவலகம் அருகே, அடிக்கடி யானைகள் கூட்டமாக வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் யானைகளின் வழிப்பாதைகள் கண்காணிக்கப்பட்டு சூழ்நிலையை பொறுத்து பட்டாசு வெடித்தும், டப்பாக்களை கொட்டியும் விரட்டும் பணி நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சோலார் மின்வேலி சீராக செயல்படுவதால் யானைகள் காட்டை விட்டு வெளியே வர முடியாது. யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  Source Link

  Read more

 • போலீசாரை மிரட்டிய இருவர் உள்பட 3 பேர் கைது

  Posted by dinakaran on 11 January 2019

  பாப்பாக்குடி, ஜன. 11:  முக்கூடல் அருகே உடையாம்புளி, சுடலை கோயில் பகுதியில் சிறப்பு எஸ்ஐ கணேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை மடக்கிய போது அதில் இருந்தவர்கள் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.  விசாரணையில் டிராக்டரில் அனுமதியின்றி ஓடை மணல் அள்ளி வந்ததும், தப்பிச் சென்றவர்கள் சிவலார்குளத்தை சேர்ந்த மதன்குமார், முத்துக்குமார், முருகன் (30), தாமரைக்கண்ணன் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து எஸ்ஐ மாரியப்பன் வழக்கு பதிந்து அவர்களை தேடி வந்தார். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.  நேற்று மருதம்புத்தூரில் நின்றிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர். அப்போது மானூர் தெற்குப்பட்டியை சேர்ந்த இசக்கிப்பாண்டி (29), ஹரி (21) ஆகியோர் அரிவாளை காட்டி போலீசாரை மிரட்டி உள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரையும் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா கைது செய்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  Source Link

  Read more

 • பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 விநியோகம்

  Posted by dinakaran on 11 January 2019

  கடையம், ஜன. 11:  கடையம் அருகே கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கம் சார்பில் வீராசமுத்திரம், ரவணசமுத்திரம், கோவிந்தப்பேரி ஆகிய பகுதிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் சுப்பிரமணியின் வரவேற்றார். சங்க தலைவர் உச்சினிமாகாளி தலைமை வகித்து பொங்கல் பரிசுகளை வழங்கினார்.இதில் சங்க இயக்குநர்கள் ராசு, தங்கபாண்டியன், பிச்சையா, அருணாசலம், செய்யது அலி, கல்யாணி, கதிஜா பீவி, சங்க எழுத்தர் முத்துசெல்வி, ஆறுமுகம், யஹ்யா, அன்சாரி, சங்க செயலாளர் ஷாஜகான், விற்பனையாளர் முத்து மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.ஆழ்வார்குறிச்சி கூட்டுறவு சங்கம் சார்பில் 1 மற்றும் 3வது கடைகளில் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், செயலாளர் கந்தசாமி, துணை தலைவர் நெல்லையப்பன், சைலப்பன், சுமன், ஆறுமுகம், ஏ.சைலப்பன், அம்பை தாசில்தார் ராஜேஸ்வரி, தனி தாசில்தார்கள் கந்தப்பன், செலின், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், விஏஓக்கள் சந்தோஷ்குமார், கிருஷ்ணவேணி, விற்பனையாளர்கள் பர்வீன், சைலப்பன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடையம் பெரும்பத்து ஊராட்சி மேட்டூர் வெய்க்காலிப்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி -சேலை மற்றும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், கூட்டுறவு சங்க துணை தலைவர் டேவிட் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி - சேலை மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டது. கடையம் ஒன்றிய அதிமுக செயலாளர் அருவேல்ராஜ். கூட்டுறவு சங்க இயக்குநர்கள் செல்வராஜ், செல்வன், ஸ்டாலின் வின்சென்ட், தர்மராஜ், கிராம உதவியாளர் முருகேஷ்வரி, விற்பனையாளர் கோபால், மாரிமுத்து மற்றும் நாராயணன், சிம்சோன் தேவதாசன், சிவநேசன், தோப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். சுரண்டை  கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களுடன் ஆயிரம் ரூபாயை செல்வமோகன்தாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வீ.கே.புதூர் தாசில்தார் நல்லையா, வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கூட்டுறவு பதிவாளர் முதுநிலை ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்டக சாலை செயலாளர் சரவணகுமார் வரவேற்றார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள், ரூ.1000 வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய அதிமுக செயலாளர் அமல்ராஜ், நகர செயலாளர் சக்திவேல், இயக்குநர் முத்துராஜ், ராதிகா, பேச்சிமுத்து, பாண்டியன், ஆடிட்டர் முத்துராஜ், முன்னாள் கவுன்சிலர் இந்திரா அழகுதுரை, பழனிசங்கர் மற்றும் ஜவகர் தங்கம், குலையநேரி அருணாசலம், முத்தையா, திருமலை கனி, ஜெயபிரகாசம், நகர அவைத்தலைவர் முருகையா, கோபால், ராஜேஷ், செல்வம், ஆறுமுகம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரெட்டைகுளம், வீராணம் பகுதியிலும் பொங்கல் தொகுப்பை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

  Source Link

  Read more

 • நாங்குநேரியில் தனி நீதிமன்ற பணிகள் தொடக்க விழா

  Posted by dinakaran on 11 January 2019

  நாங்குநேரி, ஜன. 11:  நாங்குநேரியில் தனி நீதிமன்றப் பணிகள் துவக்க விழா நடந்தது. நாங்குநேரியில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தின் பணிகள் ஒருங்கிணைந்த பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகளை முதன்மை மற்றும் கூடுதல் நடுவர்கள் கவனித்து வந்தனர். இந்நிலையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றப் பணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியே செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தனி நீதிமன்றப் பணிகளின் துவக்க விழா, நேற்று நாங்குநேரியில் நடந்தது. நீதிபதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தார், ‘நாங்குநேரி மாவட்ட நீதிமன்ற முதன்மை நடுவர் சந்திரசேகர் வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், புதிய குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்திற்கான கல்வெட்டுக்களை திறந்து வைத்தார். இதில் நாங்குநேரி கூடுதல் நடுவர் சிவசக்தி, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் காமராஜ், துணை நடுவர் மாயகிருஷ்ணன், கூடுதல் நடுவர்  பாஸ்கர், நாங்குநேரி டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.‘‘நல்ல ஊர் நாங்குநேரி’’நாங்குநேரி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் சந்திரசேகர் பேசுகையில், நான் இங்கு பணிக்கு வரும் முன் தமிழகத்திலேயே பதற்றமான பகுதி நாங்குநேரி என அறிந்தேன். ஆனால் இங்கு வந்துபிறகு அப்படி பதற்றம் ஏதும் காணப்படவில்லை. மற்ற ஊர்களைப் போல அமைதியாகத்தான் உள்ளது. இங்குள்ளவர்கள் நிர்வாகத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு தருகின்றனர். இதே ஊரில் பிறந்து மறைந்த பிரபல வக்கீல் என்.டி.வானமாமலை, 7 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உருவாக்கிய பெருமைக்குரியவர். அவரைப்போல பல திறமையானவர்கள் உள்ள ஊர் நாங்குநேரி என புகழாரம் சூட்டினார்.

  Source Link

  Read more

 • களக்காடு ஏஜி சபையில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை

  Posted by dinakaran on 11 January 2019

  களக்காடு, ஜன. 11:   களக்காடு ஒரேப் ஏஜி சபையில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை  நடந்தது. நாகர்கோவில் தென்மேற்கு பிராந்திய மேற்பார்வையாளர் போதகர் போவாஸ்  தலைமை வகித்தார். ராதாபுரம் தாலுகா தலைமை போதகர் தங்கமணி முன்னிலை  வகித்தார்.  இதில் போதகர்கள் ராதாபுரம் ரமேஷ், திசையன்விளை பாக்கியநாதன்,  பணகுடி சுவிஷேசமுத்து வடலிவிளை ஜெயசீலன் உள்பட 20க்கும் மேற்பட்ட சபை  போதகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணி  முதல் மதியம் 2 மணி வரை பிரார்த்தனை நடந்தது.

  Source Link

  Read more

 • திமுக கிராமசபை கூட்டம்

  Posted by dinakaran on 11 January 2019

  திசையன்விளை, ஜன. 11:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியத்தில் முதுமொத்தன்மொழி, க.புதூர், க.நவ்வலடி, கூத்தன்குழி, விஜயாபதி, கூடங்குளம் ஆகிய 6 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் விஎஸ்ஆர்.ஜெகதீஸ் தலைமை வகித்தார்.தலைமை கழக பொறுப்பாளர் குத்தாலம் கல்யாணம், கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சித்திக், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, திசையன்விளை முன்னாள் நகர செயலாளர் ஜெயராஜ், ராஜசேகர், பாலசுப்பிரமணியன், மகேஷ்வரன், சுகந்தி, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Source Link

  Read more

 • சாக்கு மூட்டையில் கடத்தி மணல் விற்க முயற்சி

  Posted by dinakaran on 11 January 2019

  புளியங்குடி, ஜன. 11:  சேர்ந்தமரம்  சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வடநத்தம்பட்டி  பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில்  மணல் ஏற்றி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர், இதே  பகுதியை சேர்ந்த குமரன்(40) என்பதும், இங்குள்ள ஓடையில்  இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. ஒரு மூட்டை  மணல் ரூ.100க்கு விற்க முயன்றது தெரிந்தது.  போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனம்  மற்றும் 4 மூட்டை மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

  Source Link

  Read more

 • கல்லிடைக்குறிச்சியில் 377 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

  Posted by dinakaran on 11 January 2019

  அம்பை, ஜன. 11: அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கும் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, கல்லிடைக்குறிச்சியில் நடந்தது. முருகையா பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பிடிஓ கமலகுமாரி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு, 201 பட்டதாரி பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், பட்டதாரி அல்லாத 176 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் தலா 8 கிராம் தங்கம் வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட சமூல நல அலுவலர் சரஸ்வதி, தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், முத்துலட்சுமி, முன்னாள் எம்எல்ஏ சக்திவேல்முருகன், அம்பை அர்பன் வங்கி துணை தலைவர் பிராங்கிளின், அதிமுக மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, இளைஞர் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், நகர செயலாளர்கள் சங்கர நாராயணன், அறிவழகன், கண்ணன், ராமையா, மாநில பேச்சாளர் மீனாட்சி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் முத்தையா, தொடக்க வேளாண் வங்கி இயக்குநர் விஜயபாலாஜி, வழக்கறிஞரணி ராஜசேகர், பழனிகுமார், ராமையா, சேக்மைதீன், முத்துக்குமார், பாபு, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிடிஓ விஜயசெல்வி நன்றி கூறினார்.

  Source Link

  Read more

 • செங்கோட்டை, வடகரை, களக்காட்டில் 220 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

  Posted by dinakaran on 11 January 2019

  செங்கோட்டை, ஜன. 11:  செங்கோட்டை, வடகரை, களக்காட்டில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 220 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், துப்புரவு அலுவலர் வெங்கடேசன், துப்புரவு ஆய்வாளர் மகேஸ்வரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்துமாணிக்கம், மாரியப்பன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர் முகமது புகாரி ஆகியோர் செங்கோட்டையில் உள்ள ஜவுளி, பலசரக்கு கடைகள் மற்றும் ஓட்டல்கள்  உள்ளிட்டவற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 200 கிலோ தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபோன்று பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் வடகரை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் முருகன் மற்றும் வரி வசூலர், பணியாளர்கள்கள் ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த சோதனையின்போது 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் அலுவலர்கள் களக்காடு பஜாரில் கடை, கடையாக சென்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனையிட்டனர். ஒரு சில கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

  Source Link

  Read more

 • சேரன்மகாதேவி கோயில்களில் தீர்த்தவாரி-தெப்பத் திருவிழா

  Posted by dinakaran on 11 January 2019

  வீரவநல்லூர், ஜன. 11:  சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி விழா மற்றும் ராமசாமி கோயிலில் தெப்பத்திருவிழா நடந்தது. சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பக்தவச்சல பெருமாள் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நவநீதகிருஷ்ண சுவாமி கோயில்களில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு புனித நீராடினர். இதேபோல் சேரன்மகாதேவி ராமசாமி கோயிலில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு சாற்றுமுறை தீர்த்தம் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு திருவீதி உலா, இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பக்த பேரவையினர் செய்திருந்தனர்.

  Source Link

  Read more

 • வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம் களக்காடு பள்ளி விழாவில் வசந்தகுமார் எம்எல்ஏ பேச்சு

  Posted by dinakaran on 11 January 2019

  களக்காடு, ஜன. 11: வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம் என்று களக்காடு அரசு பள்ளியில் நடந்த விழாவில் வசந்தகுமார் எம்எல்ஏ பேசினார். களக்காடு  அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெய்சிங் மால்ராஜ்  தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி வரவேற்றார். 387  மாணவ, மாணவிகளுக்கு வசந்தகுமார் எம்எல்ஏ இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது: ஆசிரியர்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் மாணவ, மாணவிகளின்  வெற்றிக்கு உழைக்கின்றனர். மாணவ, மாணவிகள் முடியாது  என்ற சொல்லை தவிர்த்துவிட்டு, எதையும் முடித்து காட்டுவேன் என்ற  தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு  தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம், என்றார். தமிழாசிரியர் சேக் முகைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  ஆசிரியர் சுந்தரராமன் நன்றி கூறினார். இதேபோல் களக்காடு கே.ஏ.எம்.பி  மீரானியா மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் பீர்முகம்மது  தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் யாகத் அலிகான் வரவேற்றார். 139 பேருக்கு இலவச சைக்கிள்களை  வசந்தகுமார் எம்எல்ஏ வழங்கினார். தொடர்ந்து  பள்ளியில் புதிய நூலகம் கட்ட சொந்த நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம்  வழங்கினார். விழாவில் பள்ளி துணை தலைமை ஆசிரியர் நாகூர்மீரான், நெல்லை  கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமாார், நகர தலைவர் ஜார்ஜ்வில்சன், மாவட்ட சிறுபான்மை  பிரிவு துணை தலைவர் பீர்முகம்மது, மாநில செயற்குழு உறுப்பினர்  கிருஷ்ணகுமார், சேகர், நாங்குநேரி நகர தலைவர் சுடலைக்கண்ணு உள்பட பலர்  கலந்து கொண்டனர். தொடர்ந்து களக்காடு யூனியன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தாலிக்கு  தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பேருக்கு தலா 1 பவுன் தங்கத்தையும் வசந்தகுமார் எம்எல்ஏ வழங்கினார். இதேபோல் புளியரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிமுக மாணவரணி செயலாளர் முருகேசன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கோமதி ராஜா, தலைைம ஆசிரியை இந்திராபாய் ஆகியோர் 139 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

  Source Link

  Read more

 • திருவேங்கடம் அருகே லாரி மோதி விவசாயி காயம்

  Posted by dinakaran on 10 January 2019

  திருவேங்கடம், ஜன. 10: குண்டம்பட்டிைய சேர்ந்தவர் விவசாயி ஜேசுராஜ் (54). நேற்று முன்தினம் இவர், திருவேங்கடத்தில் பொருட்கள் வாங்கி விட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது  டிரைலர் லாரி மோதி காயமடைந்தார்.இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் ஆன்டோ ரவிபாண்டியன்(34) என்பவரை கைது செய்தனர்.

  Source Link

  Read more

 • பெருங்கோட்டூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

  Posted by dinakaran on 10 January 2019

  சங்கரன்கோவில், ஜன. 10: நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெருங்கோட்டூரில் ‘‘மக்களை சந்திப்போம், சொல்வோம், வெல்வோம்’’ என்ற தலைப்பில் திமுக தலைவர் அறிவித்த ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். குருவிகுளம் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, சேர்மத்துரை, மாவட்ட இளைஞரணி ராஜதுரை, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் குழந்தை தமிழரசன் கலந்து கொண்டு பெருங்கோட்டூர்  மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார். குறைகளை அனைத்தும் திமுக தலைவரிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு குமார், விவசாய தொழிலாளரணி அஜய் மகேஷ்குமார், திமுக ஊராட்சி நிர்வாகிகள் கோவிந்தன், நாகேந்திரன், சங்கரய்யா, வேல்ராஜ், செல்லபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Source Link

  Read more

 • கடையம் அருகே சிதிலமடைந்த நிழற்குடையால் பயணிகள் பீதி

  Posted by dinakaran on 10 January 2019

  கடையம், ஜன. 10: கடையம் அருகே சிதிலமடைந்து காட்சியளிக்கும் பயணிகள் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி புதிய நிழற்குடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் மாதாபுரம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பயணிகள் நிழற்குடையை மாதாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் நிழற்குடை மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி விழுகின்றன. நிழற்குடை முன்பகுதி சிலாப் சிமென்ட் காரைகள் விழுந்து கம்பிகள் ஆங்காங்கே வெளியே தெரிகின்றன. மேலும் பயணிகள் நிழற்குடை மேற்கூரையில் மழைநீர் தேங்கி பலமிழந்தும் காணப்படுகிறது. இதனால் மக்கள் பீதியுடன் பயணிகள் நிழற்குடையில் அமராமல் சாைலயோரமாக நின்றபடி பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். எனவே இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படும் பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு இப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Source Link

  Read more

 • சுவாமி சிலைகளை உடைத்தவர் கைது

  Posted by dinakaran on 10 January 2019

  சுரண்டை, ஜன. 10: சுரண்டை அருகே சுவாமி சிலைகளை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.சுரண்டை அருகே உள்ள கண்டுகொண்டான்மாணிக்கம் கிராமம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சந்திரசேகர் (32), கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், குடிபோதையில் இங்குள்ள மாடசாமி, ஈஸ்வரி அம்மன் கோயிலில் புகுந்து 2 சுவாமி சிலைகளை உடைத்துள்ளார். அப்பகுதி மக்கள், அவரை கையும் களவுமாக பிடித்து சாம்பவர்வடகரை போலீசில் ஒப்படைத்தனர். எஸ்ஐ சஞ்சய்காந்தி வழக்கு பதிந்து அவரை கைது செய்தார்.

  Source Link

  Read more

 • இந்திய தேவசபையின் கன்வென்சன் கூட்டம் நெல்லையில் இன்று துவக்கம்

  Posted by dinakaran on 10 January 2019

  நெல்லை, ஜன. 10: இந்திய தேவசபையின் கன்வென்சன் கூட்டம் நெல்லையில் இன்று துவங்கி 4 நாட்கள் நடக்கிறது. பாளை மத்திய சிறை எதிரே செயல்படும் காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் இந்திய தேவசபையின் 4 நாள் கன்வென்சன் கூட்டம் இன்று (10ம் தேதி) மாலை 6 மணிக்கு துவங்குகிறது. இதில், ‘பலங்கொண்டு திடமாகயிரு’ என்ற தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்திய தேவசபையின் குருவானவர்கள் பேசுகின்றனர். கூட்டத்திற்கு மாநில இயக்குநரான குருவானவர் ஞானதாஸ் தலைமை வகிக்கிறார். குருவானவர்கள் சொர்ணராஜ், நீலகிரி டேவிட் ஸ்டான்லி தேவசெய்தி அளிக்கின்றனர். நாகர்கோவில் பாஸ்டர் ஜான்சாம் ஜாய்சன் துதி ஆராதனை நடத்துகிறார். ஏற்பாடுகளை சாந்திநகர் பாஸ்டர் டைட்டஸ் தலைமையில் பாஸ்டர்கள் ஜெபராஜ், எபனேசர், ஜேக்கப் செய்து வருகின்றனர். இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்திய தேவசபையின் உறுப்பினர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

  Source Link

  Read more

 • இறைவனை தேடி மானூர் அருகே மக்கள் மறியல்

  Posted by dinakaran on 10 January 2019

  மானூர், ஜன. 10:  அழகியபாண்டியபுரம், நெல்லை - சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு பஸ் நிலையம், ஊரின் உள்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பெரும்பாலானவை, பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.  இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், நேற்று காலை மெயின் ரோட்டுக்கு திரண்டு சென்று பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மானூர் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையேற்று மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  Source Link

  Read more

 • வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் கைது

  Posted by dinakaran on 10 January 2019

  திருவேங்கடம், ஜன. 10: திருவேங்கடம் அருகே உள்ள சின்னகாளாம்பட்டி காலனியை சேர்ந்தவர் தங்க மாரியப்பன் மகன் ராஜதுரை (22). கூலி தொழிலாளியான இவர், ஒரு சமுதாய பிரமுகர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு செய்தி பரப்பியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட நபர், இதுகுறித்து சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்து சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.

  Source Link

  Read more

 • பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 வழங்கல்

  Posted by dinakaran on 10 January 2019

  வி.கே.புரம், ஜன. 10:  நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.சிவந்திபுரம், வி.கே.புரம் மற்றும் ஆலடியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முருகையா பாண்டியன் எம்எல்ஏ, பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள், ரூ.1000 வழங்கி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், சிவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தர்மர், துணை தலைவர் பழனி, சிவந்திபுரம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் பிராங்கிளின், வி.கே.புரம் அதிமுக நகர செயலாளர் கண்ணன், அறிவழகன், சங்கரநாராயணன், ராமையா மற்றும் பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், அருண், உட்பட பலர் கலந்து கொண்டனர்.1919 தென்காசி செங்கோட்டை தாலுகா கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக்கடை மற்றும் மேலப்புலியூரில் உள்ள ரேஷன் கடைகளில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளர் சுடலை தலைமை வகித்தார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், அரசு வக்கீல் சின்னத்துரை பாண்டியன், நகர நிர்வாகிகள் கசமுத்து, வெள்ளப்பாண்டி, சந்திரமோகன், சுப்பிரமணியன், சுலைமான், முன்னாள் மாவட்ட செயலாளர் குமார்பாண்டியன் மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இட்டமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் சிங்கராஜ், உறுப்பினர் ஆதிலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.குருக்கள்பட்டியில் தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் 3,361 பயனாளிகளுக்கு 1 கிலோ அரிசி, 1 கிலோ வெல்லம், முந்திரிபருப்பு, கிஸ்மஸ்பழம், 2 அடி நீள கரும்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 வழங்கப்பட்டது.இதில் கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன், முருகன், கிருபாகரன், பாலுசாமி, மகாலட்சுமி, செயலாளர் கருப்பசாமி, எழுத்தர் சுப்பையா பாண்டியன், அமமுக கிளை செயலாளர் சண்முகையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலப்பாவூர் ரேஷன் கடையில் நடந்த விழாவில் அதிமுக கிளை மேலவை பிரதிநிதி கொம்பையா பாண்டியன், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் செல்வராஜ், சுடலை, செல்வம், பேச்சிமுத்து, செல்லப்பா, தங்கப்பாண்டி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Source Link

  Read more

To Top To Top